Monday, October 26, 2015

சேவாக் எனும் இமயம் இனி மேல் இல்லை .

ஒருகாலத்தில் கங்குலி- சச்சின் கூட்டணி என்பது சில காலங்களில் மாறி ஷேவாக்- சச்சின்  ஆரம்ப துடுப்பட்ட வீரர்களாக  களமிறங்கியபோது ''யார் இவன் என்று உலகமே அதிசயித்த வரலாறுகள் ஏராளம். சச்சினைப் போலவே விளையாடுறான் என ஆரம்பித்து,  சச்சினையே முந்தி விடுவனோ  என்று அதிசயிக்கும் அளவுக்கு  பவுண்டரிகளாலும், சிக்ஸர்களாலும்  அதிசயிக்க வாய்த்த ஒரு சிறப்பான துடுப்பட்ட வீரர் ஷேவாக். சச்சின் 90 ஓட்டங்களை   நெருங்கியதும்  சதம் கடப்பதற்காக  தடுமாறும் போது  சாதரணமாக சிக்சர்களைத் பறக்க விட்டு  சதம், இரட்டை சதம், முச்சதம் என எதற்கும் எந்த ஆர்ப்பட்டமும்  காட்டாமல்  துடுப்பாட்டத்தில் மிரட்டியவர். பூஜ்ஜியத்தில் இருந்தாலும் சரி, 99 ஓட்டங்களில் இருந்தாலும்சரி , 295 ரன்களில் இருந்தாலும் சரி அவரது துடுப்பு பந்தை பதம் பார்க்குமே தவிர பணியாது காரணம் அவரது துடுப்புக்கு எதிரணி பந்து வீச்சாளர்கள் பயந்து நடுங்கிய வரலாறுகள் பல.


1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானவர  ஷேவாக். ஆரம்பமே அபசகுனம்தான். 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.பந்துவீச்சு சொல்லவே வேண்டாம் சொதப்பலோ சொதப்பல். அடுத்த ஒன்றரை ஆண்டுகள்,  இந்திய அணியில் ஆடும் வாய்ப்பே ஷேவாக்குக்கு கிடைக்கவில்லை. 2001-ஆம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் இல்லை. நியூசிலாந்து, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணி இலங்கை வந்தபோது . கங்குலியுடன் துடுப்பாட்ட  வீரராக யாரை களமிறக்குவது என இந்திய அணிக்குள் பல குழப்பம் . யுவராஜ் சிங், அபய் குரசியா என யார் யாரையோ எல்லாம் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இந்திய கிரிக்கெட் சபை தெரிவு செய்து வைத்திருந்தது. எனினும் ஒரே ஒரு வாய்ப்பு தான் சேவாகுக்கு வழங்கப்பட்டது.நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  நியூசிலாந்து 260 ஓட்டங்கள் எடுக்க . தனக்கு தரப்பட்ட  69 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக தன்னை உயர்திக்கொண்டர் ஷேவாக். அதன்பிறகு இந்தியாவின் நிரந்தர ஆரபதுடுப்பட்ட வீரர் ஷேவாக்தான்.

கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்பார்கள். ஆனால், கிரிக்கெட்டை ஜென்டில்மேன்களைத் தாண்டி எல்லோரும் ரசிக்கும் விளையாட்டாக மாற்றியவர்கள் ஒரு சிலரே. அதில் மிக முக்கியமானவர் வீரேந்திர ஷேவாக். , 'டெஸ்ட் போட்டியிலும் ஆக்ரோஷம் காட்ட முடியும் அதிரடியாக துடுப்பெடுத்தடினால்  ஒருவரால் 300 ரன்கள் குவிக்க முடியும்' என்று ஆச்சரிப்படுத்தியவர் ஷேவாக். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இரண்டு முச்சதங்களும், மூன்று இரட்டை சதங்களும் விளாசியிருக்கும் அன் டிப்ளோமேட்டிக் பேட்ஸ்மேன் ஷேவாக்.

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அஜெந்தா மென்டிஸ் என்னும் புதிய சுழற்பந்து வீச்சாளரைப் பார்த்து இந்திய வீரர்கள் நடுங்கிக்கொண்டிருந்த சமயத்தில்  மென்டிஸை துவம்சம் செய்தவர் ஷேவாக். ''சுழற்பந்து வீச்சாளர்களை நான் பந்துவீச்சாளர்களாகவே கருதுவதில்லை. சுழற்பந்து வீச்சாளர் என்பவர் துடுப்பாட்ட  வீரரால் தான்  உருவாகிறார். அவர் பந்தை சுழல்வதற்கு முன்பே அடித்துவிட்டால் அப்புறம் ஏது சுழற்பந்து. பந்து சுழல்வதற்கு முன்பாகவே தூக்கி கிரவுண்டுக்கு வெளியே அடித்தால் ஒருவர் எனக்கு வாழ்நாள் முழுக்க ஸ்பின்னே போடமாட்டார்" என்று சொல்லி சுழற்பந்து வீச்சாளர்களை கதிகலங்க வைத்தவர் சேவாக்.

''எனக்கு டெக்னிக்ஸ் மீது நம்பிக்கை கிடையாது. நான் பர்ஃபாமென்ஸின் மீது நம்பிக்கை கொண்டவன். நீங்கள் ஸ்ட்ராங்காக இருந்தால்போதும், டெக்னிக் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களால் சமாளிக்க முடியும். என் வாழ்க்கையில் நடந்தது அதுதான். பத்தாம் வகுப்பு படித்து முடித்தபின்னர்தான் நான் சீரியஸாக கிரிக்கெட் விளையாட பயிற்சியாளரிடம் சேர்ந்தேன். டெக்னிக்ஸை கற்றுக்கொள்ள எனக்குப் பொறுமையில்லை. பந்தை எப்படி போட்டாலும் பௌண்டரி லைனை  தாண்டி அடிக்கவேண்டும் என்பதில்தான் என் கவனம் இருக்கும். சர்வதேச கிரிக்கெட் விளையாட வந்தபோதும் என் ஸ்டைலை, என் அணுகுமுறையை  நான் மாற்றிக்கொள்ளவில்லை. சில தொடர்களில் நான் சரியாக ஆடாதபோது டெக்னிக்ஸ் வேண்டும் என்று சொல்வார்கள். அடுத்தப்போட்டியிலேயே சதம் அடித்துவிட்டால் ஷேவாக்கின் ஸ்டைல் இதுதான் என்பார்கள். இங்கே எதற்குமே இதுதான் ஃபார்முலா என்று இல்லை. ஃபார்முலாக்களை நம்பினால் சில நேரங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும். உங்கள் திறமையை நம்பினால் எப்போதுமே வெற்றிதான்" என்பது ஷேவாக்கின் சக்ஸஸ் சீக்ரெட்.

மிகச்சிறந்த என்டர்டெய்னர், அசைக்கமுடியாத மேட்ச் வின்னர் ஷேவாக். அப்பர் கட் ஷாட்டை மிகச்சரியாக விளையாடியவர், விளையாடுபவர் . மைதானத்தில்  ஒரு இடத்தில் ஷேவாக் நிலையாக நின்று ஆடவே மாட்டார். கால்கள் நகர்ந்துகொண்டே இருக்கும். இதனால் அவரது பின்காலில் ஒரு பெரிய கோதுமை மூட்டையைக் கட்டி விட்டுவிட்டு முன் காலைப் பயன்படுத்தி ஆடவைத்தோம். அதன்பிறகு ஃப்ரன்ட் ஃபூட்  மட்டும் அல்ல, பேக் ஃபூட், அப்பர் கட், அக்ராஸ் தி லைன் என பந்துகளை நொறுக்கித்தள்ள ஆரம்பித்துவிட்டார் ஷேவாக்" என்கிறார் ஷேவாக்கின் பயிற்சியாளர் அமர்நாத் ஷர்மா.


கிரிக்கெட் மைதானத்தில் ஷேவாக் அடித்த முச்சதங்கள், இரட்டை சதங்களைத்தாண்டி அவரது முக்கியமான இன்னிங்ஸ்கள் பல இருக்கின்றன. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே, அதுவும் தென் ஆப்ரிக்காவின் ப்ளூம்ஃபான்டின் மைதானத்தில் 105 ரன்கள் விறுவிறுவென அடித்து டெஸ்ட் போட்டியில் தனக்கான இடத்தைப் பதிவு செய்தார் ஷேவாக். டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்  ஷேவாக்தான்.
உண்மையில் இந்திய கிரிக்கெட் சபை சச்சினுக்கு  எவ்வாறு ராஜா மரியாதையை செய்து வைத்தோ அது போன்றே சேவாகுக்கும் செய்திருக்க வேண்டும்.
ஷேவாக் என்பவர் யார்? அதிரடி என்றல் சேவாக் தான்.ஷேவாக் ஒரு கிரிக்கெட் வரலாற்றில் ஒரு  ஜீனியஸ். அவரது ஆட்டத்தை அவரது ஸ்டைலில் இன்னொருவர் எந்த காலத்திலும் இனி ஆடவே முடியாது. ஷேவாக் என்பது பெரும் கனவு.அந்த கனவு ஓய்வை அறிவித்து விட்டது. வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பி  வைப்போம் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனை.





No comments:

Post a Comment