Wednesday, October 21, 2015







சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும்  கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐப்பசி அமாவாசை நாள்தான் கேதார கௌரி விரத நாள்.எனவே அந்த சிறப்பான விரதம் இன்று ஆரம்பித்து விட்டது. எனவே அது தொடர்பான பதிவு.

கேதார கௌரி விரதம் அம்மை கௌரியே அனுஷ்டித்த விரதம்.அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்த்தநாரீசுவராக ஆன வரலாறு இதோ பின்வருமாறு.

பிருங்கி முனிவர் அதி தீவிரமான சிவ பக்தர். அவரை  தவிர சிவன் மீது அன்பு வைத்த,பக்தி கொண்ட  ஒரு சிவ பக்தர் கிடையாது என்ற அளவுக்கு சிவ பக்தர் அவர்.சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார். ‘ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் என் கயிலைநாதன்தான் என்று பல தடவைகள் அவரது சகாக்களிடம் ( முனிவர்கள்) சீடர்களிடம் கூறுவார். அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்றெல்லாம் உள்ளார்ந்த பக்தியுடன்,ஆலவாய் அழகனை மட்டுமே துதித்து வந்தார். பிற கடவுளர்களை சற்றும் சிந்திக்காத அவருடைய போக்கு, சிலசமயம் அக்கடவுளர்களையே அவமதிக்கும் வகையிலும் அமைந்ததுண்டு.
ஒரு சமயம் -பார்வதிதேவியார்  கயிலாயத்தில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும்போது, பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னைத் திரும்பியே பார்க்காமல் போவதும்  பார்வதி தேவிக்கு  மன வருத்தத்தைத் தந்தது.


எப்படியாவது பிருங்கி முனிவரை, தன்னையும் வணங்கச் செய்யவேண்டும் என்று விரும்பிய உமையவள், பெரு மானிடம் நெருங்கி அமர்ந்துகொண்டாள். இப்படி அமர்ந்திருக்கும்போது, தன்னைத் தவிர்த்து இவரை மட்டும் பிருங்கி  முனிவரால் எப்படி வலம் வர முடியும்? என்று நினைத்தாள்.
வழக்கம்போல பிருங்கி முனிவர் வந்தார். சிவனோடு உமையவள் நெருங்கி வீற்றிருப்பதைப் பார்த்தார்.  என்ன  செய்வது என்று குழம்பினார். பிறகு தெளிவாகி, ஒரு வண்டாக உருவெடுத்தார். இருவருக்கும் இடையே புகுந்து  சிவனை மட்டும் வலம் வந்தார்.

இதைக் கண்டு கடுமையான கோபம் கொண்ட தேவி . சக்தியும் சிவனும் ஒன்று என்ற தத்துவம் புரியாமல், தன் தலைவனை மட்டும்  வணங்கும் இந்த முனிவரின் ஆணவத்தை அடக்க எண்ணினாள்.  தன்னை அவமானப்படுத்திய முனிவரின் கால்கள்  முடமாகிப் போக சபித்தாள்.

அது உடனே பலித்தது. ஆனாலும், தன் பக்தனை அந்த நிலையிலேயே விட்டுவிட  இறைவனுக்கு சம்மதமில்லை. அவரது கால்களை சரிசெய்ததோடு, மூன்றாவதாக ஒரு காலையும் உருவாக்கித் தந்தார்.  அதோடு ஒரு கோலையும் அளித்து, பிருங்கி முனிவர் ஊன்றிச் செல்லவும் வழி செய்து கொடுத்தார்.

தன் கணவர் முனிவருக்கே ஆதரவாக நடப்பதைப் பார்த்து அன்னை வெகுண்டாள். உடனே, தன்னை அவருடைய  முழுமையான அன்புக்கு உரியவளாக ஆக்கிக் கொள்ள தீர்மானித்தாள். அதற்கு தவமே சிறந்த வழி என்று நம்பி,  பூலோகத்திற்கு வந்தாள். ஒரு வயல்வெளியைத் தேர்ந்தெடுத்தாள். சிவனை எண்ணி தவமிருந்தாள்.

கடுமையான தவம். அன்னையின் தவக் கடுமையினால் சுற்றி இருந்த மரங்களும், செடிகளும், கொடிகளும் கருகித்  தீய்ந்தன. மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்து அவளை ஆட் கொண்டார். ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ என்று வேண்டினாள் அன்னை. ‘தந்தேன்’என்றார்  மகாதேவன்.


“உங்களைப் ‘பிரியாத’ என்றால் அருகிலேயே இருப்பதல்ல, உடலோடு ஒன்றியதாக... உடலைவிட்டுப் பிரிக்க  முடியாதவளாக...” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்துகொண்டார் பரமன். உடனே அவள் வேண்டிய வரத் தை அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.
தேவிக்கு சந்தோஷம். இனி பிருங்கி முனிவரல்ல, யாருமே என்னை என் தலைவனிடமிருந்து பிரிக்க முடியாது. சிவன்  வேறு, சக்தி வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள்,  இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண் டும் என்று சிவனுடன் சேர்ந்து விதி செய்தாள்.
இவ்வாறு அம்பிகை, இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவனிடமிருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை  உருவாக்கிக் கொண்ட நாள்தான் கேதார கௌரி விரத நாள்.
கேதரம் என்றால் வயல். கௌரி என்ற பார்வதி வயல்வெளியில் தவமிருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால்  இந்த விரதம் ‘கேதார கௌரி விரதம்’ என்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தம் மாங்கல்ய பலம் நீடிக்கவும், தன் மீதான கணவரின் அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டும் என்ற  வரத்தைப் பெற கேதார கௌரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கிறார்கள். அன்றைய தினத்தில், பண்டிகைக்கான பூஜைகளுக்குப் பிறகோ அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவோ,  பூஜையறையில் விளக்கேற்றி, சிவபெருமான் படம் அல்லது லிங்கம் அல்லது சிவ - பார்வதி படத்தின் முன்  பக்தியுடன் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.


சிவ துதிகளைப் பாட வேண்டும். அம்மன் - சக்தி பாடல் களைப்  பாடவேண்டும். ‘ஓம் நமசிவாய, சிவாய நம ஓம், ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்று பஞ்சாட்சர மந்திரத்தை அன்று முழுவதும் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.  முடிந்தால், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யலாம். அந்த அபிஷேகப் பாலையே பிரசாதமாக அருந்தலாம், கு டும்பத்தில் பிறருக்கும் கொடுக்கலாம். பாயசம் அல்லது அப்பம் நைவேத்யம் செய்யலாம். தம் கணவர் மற்றும் தம் குடும்ப உறுப்பினர் அனைவரது நலனுக்காகவும் உமையொரு பாகனை வேண்டிக் கொள்ளலாம்.

இந்த விரத்ததின் ஏனைய சிறப்புக்கள்.

மஹா விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்தே வைகுண்டபதியாகி இருக்கிறார்.பிரம்ம அன்னத்தை வாகனமாக பெற்றிருக்கிறார். அஷ்ட திக் பாலகர்கள் பிரம்மனிடமிருந்து பெற்ற சாபத்திலிருந்து விமோசனம் அடைந்ததும் இவ்விரத மகிமையினால்தான். தவிர  இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது. இவ்விரதத்தினை அனுஷ்திப்பதால் ஐஸ்வரியம் பெருகும் என்பது திண்ணம்.வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. அந்நாளில் அம்பிகை மலையரசன் பொற்பாவை சிவபெருமானை நோக்கி “எம்பெருமானே இவ்விரதத்தை உலகில் யார் அனுஷ்டித்தாலும் அவர்கள் விரும்பியவற்றை அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும் அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று அவ்வண்ணமே அருள் புரிந்தார்.இப்போது புரிகிறதா இந்த விரதத்துக்கு இவ்வளவு மகிமை இருக்கிறது என்று.

சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்தர்வராஜனுக்கு கூறியருளினார். விரதத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தார்கள்.

இந்த விரதத்தின் மகிமை

சிரத்தையுடன் தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் பெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை.
 நல்ல ஆடவர்களை  கணவனாக வேண்டி கன்னி பெண்களால் இந்த விரதம் அனுஷ்டிக்க படுகிறது. ஆண்களும் தமது நலனுக்காக இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நல்லது.

No comments:

Post a Comment