Wednesday, March 9, 2016

ஒரு இமயம் உறங்கி விட்டது.


அவருக்கு இப்போது தான் 53 வயது. இறக்கின்ற வயது இல்லை அவருக்கு. நான் உட்பட என்னிலும் வேறு பட்ட ரசிகர்கள் ,தலை சிறந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இவரை நிச்சயம் மிஸ் செய்வார்கள். இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக அற்புதமான, அதி அற்புதமான மனிதராக நான் கிரிக்கெட் உலகில் இன்னும் மதிப்பது இவரை தான்.

மார்ட்டின் குரோவ் நியூசிலாந்து கிரிக்கெட் அணியை வளர்த்தெடுத்த, நியூசிலாந்து அணியை தலை நிமிர வைத்த இந்த தலைமுறையின் கோட் ஒப் கிரிக்கெட் என்பேன்  . அவர் கடந்த வாரம் இறந்து விட்டார். அவர் இறந்த உடன் சற்று தயக்கமாகவும், சற்று கோபமாகவும் இருந்தது. 

காரணம் நான் கிரிக்கெட்டை உயிரை விடவும் ஒரு படி மேலே நேசிக்கக் கற்றுக் கொண்டதற்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர். அவர் இறந்த உடனேயே இந்த பதிவை இணையத்தில் உலாவ விட்டிருக்க வேண்டும் கால சூழ்நிலைகள், அதி பயங்கரமான வேலைபளுக்கல் என்பன காரணமாக சற்று காலம் தாழ்த்தி இந்த பதிவை இடுகிறேன், இறந்த இந்த தலைமுறையின் மிக சிறந்த கிரிக்கெட் வீரரின் ஆத்மா இறைவன் அடியில் உன்னதமாக சேரட்டும் என்று.

கடந்த 2013 ஆம் ஆண்டு குரோவுக்கு  புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பது தெரிய  வர,அவரது  குடும்பம் உட்பட சகல கிரிக்கெட் ரசிகர்களும் ஒரு கணம் சோர்ந்து போனார்கள். அன்றிலிருந்து சரியாக 03 வருடங்கள் அவருக்கு சிகிச்சைகள்  வழங்கப்பட்டன.இறுதியாக ஆக்லாந்து  மருத்துவமனையில் இவரது உடல் பிரிந்திருக்கிறது.



கடந்த 1982ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய   அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமான மார்ட்டின் குரோ 13ஆண்டுகள் நியூநிலாந்து அணிக்காக விளையாடினார். 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5444 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 17 சதங்களும் அடங்கும். அதிகபட்ச ஓட்டம் இலங்கை அணிக்கு எதிராக வெலிங்டன் மைதானத்தில் பெற்றுக் கொண்டார் ஓட்டங்கள்  எத்தனை தெரியுமா ஒரு போட்டியில்  299.  தவிர சராசரி 45.36.

 ஒரே ஒரு ஆசை.

இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் இருக்கும் நாட்கள் நரகமாகிவிடும்தானே. இந்த நிலைதான்  நியூசிலாந்து அணியின் முன்னாள் அணி தலைவர்  மார்ட்டின் குரோவுக்கும். மிகச்சிறந்த கிரிக்கெட்டராக உண்மையான ஜென்டில்மேனாக வாழ்ந்து வந்த குரோவின் வாழ்க்கையில் விதி விளையாடி விட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ட்டின் குரோவுக்கு  புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும் அவர் இன்னும் வாழப்போவது 12 மாதங்கள் மட்டுமே என்றும் அதற்கு மேல் உயிர்வாழ  5 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாகவும் ஏற்கனவே மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.



உலகக் கிண்ண வரலாற்றில் கடந்தாண்டு  முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியதால், இறுதிப் போட்டியை நேரில் பார்க்க மெல்பர்ன் மைதானத்திற்கே வந்திருந்தார்  மார்ட்டின் குரோ.
இந்த  போட்டியை நியூசிலாந்து அணி நிச்சயம் வெல்லும் என்றும், இதுதான் நான் நேரில் பார்க்கும் கடைசிப் போட்டி' என்றும் மார்ட்டின் குரோ உருக்கமாக கூறியது கிரிக்கெட் ரசிகர்களை என்னவோ   செய்துக் கொண்டிருந்தது.


குறைந்தபட்சம் இந்த மனிதருக்காகவாவது நியூசிலாந்து அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டனர் எல்லா உலக வாழ் கிரிக்கெட் ரசிகர்களும். ஆனால் நியூசிலாந்து அணியின் கெட்ட நேரம் இறுதிப் போட்டியில்  மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்தது.போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மார்ட்டின் குரோவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. 



நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்ற கனவுடன் மெல்பர்ன் வந்த மார்ட்டின் குரோவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணி வீரர்களை வாழ்த்தவும் அவர் தவறவில்லை.

இந்த நிஜ கிரிக்கெட் வீரருக்காகவாவது நியூசிலாந்து அணி  கடந்த  உலகக் கோப்பையை வென்றிருக்கலாம் என்று மனம் பதை பதைப்பதை உள்ளார்ந்து இந்த பதிவை வாசிக்கும் போது  உணர்ந்துக் கொள்வீர்கள்.



இன்று  ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடும் ஐ.பி.எல்  போட்டிகளாக இருக்கட்டும்,இன்று கிரிக்கெட் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் டி20 உலகக் கிண்ணமாக  இருக்கட்டும்  இவ்வகையான எல்லா போட்டிகளுக்கும் பிள்ளையார் சுழி இட்டது இவர் தான்.கால்பந்து,  போன்ற  இதர விளையாட்டுக்கள் எல்லாம்  சொற்ப  நேரத்திலேயே முடிவடைய, கிரிக்கெட் மட்டும் ஐந்து நாட்களும், ஒருநாள் போட்டிகள் ஏழு மணி நேரமும்  விளையாடப்படுவது ரசிகர்களுக்கு சலிப்பைத் தந்துவிடும் என்று குரோவ் கருதினார். அதன் விளைவு 1997- ம் ஆண்டு ‘கிரிக்கெட்மேக்ஸ்’ என்ற புதிய முறை  இவரால் கிரிக்கெட்டில் அறிமுகப்படுதப்பட்டது.




ஒவ்வொரு அணியும் 10 ஓவர்கள் கொண்ட இரு இன்னிங்ஸ்களில் விளையாடும் இப்போட்டியில்தான் இன்றைய ‘ஃப்ரீ ஹிட்’டும் அறிமுகப்படுத்தப்பட்டன. ரன்களை இரட்டிப்பாக்கும் மேக்ஸ் ஜோன், நான்கு ஸ்டம்புகள் என துடுப்பாட்ட வீரர்கள், பந்து வீச்சாளர்கள்  அனைவருக்கும் ஏற்ற வகையில் விதிகளை அமைத்து, ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.



 நியூசிலாந்தில் முதல் தரப் போட்டிகள் இம்முறையில் விளையாடப்பட்டு வந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் தங்கள் கவுன்டி போட்டிகளில் இம்முறையை சிறு மாற்றங்களோடு அறிமுகம் செய்தது. அதுவே இன்றைய டுவென்டி 20 போட்டிகள். இன்று நாம் கொண்டாடும் பிக்-பேஷ், ஐ.பி.எல் போட்டிகளில் எல்லாம் இந்த மாமனிதனின் சிந்தனைகள் தான்.
அத்தோடு மட்டும் கிரிக்கெட் மீதான அவரது காதல் முடிந்துவிடவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு, தனது 49-வது வயதில் மீண்டும் முதல் தரப் போட்டிகளில் விளையாட விரும்பினார் குரோவ். கிரிக்கெட் வீரரான தனது தந்தை விளையாடிய கோர்ன்வால் அணிக்காக விளையாட ஆயத்தமானாலும் சில சில காயங்களால்  அவை தடைபட்டன. அதற்கு முன்பு 2011-ல் சில நிதி திரட்டும் போட்டிகளிலும்  அவர் விளையாடினார்.






இரு பெரும் தவறுகள்.


இன்று நியூசிலாந்தின் தலைசிறந்த வீரராகக் கருதப்படும் பிரெண்டன் மெக்கலமின் சாதனைகளை அன்றே படைத்திருப்பார் குரோவ். 300 ஓட்டங்கள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை 1991லேயே படைத்திருப்பார் அவர். வெல்லிங்டனில் நடந்த இலங்கைக்குஅணிக்கு எதிரான அப்போட்டியில் 299 ஓட்டங்களில் இருந்த  அவர், அர்ஜுன ரணதுங்கவிடம்  பிடி கொடுத்து ஓட்டத்தில் தனது முச்சதத்தை தவறவிட்டார். பின்னர் 2014 ல் அதே மைதானத்தில் மெக்கலம் அந்த சாதனையை படைத்திருந்தார்.
1992 உலகக்கிண்ண போட்டிகளின் போது மிகச்சிறப்பாக நியூசிலாந்து அணியை அரையிறுதி வரை வழிநடத்திச் சென்றார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான அப்போட்டியில், வசிம் அக்ரம், இம்ரான் கான், முஸ்தாக் அகமது ஆகியோர் உள்ளடங்கிய உலகின் தலைசிறந்த பந்துவீச்சை எதிர்கொண்டு வெறுமனே 83 பந்துகளில் 91 ஓட்டங்களை விளாசி தள்ளினார்.




 நியூசிலாந்து அணி 262 ஓட்டங்களை   குவித்த தருணம் குரோவுக்கு  காயத்தின் ரூபத்தில் பிரச்னை வந்தது. காயம் கடுமையாக இருந்ததால் ஜான் ரைட்டிடம் தலைமை  பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தார். ஆனால் அப்போட்டியில் பாகிஸ்தான் வென்று விட்டது.  முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது நியூசிலாந்து அணிக்கு . “நான் ஒரு வகையில் பந்துவீச்சாளர்களை உபயோகித்திருப்பேன். ஆனால் ஜான் ரைட்டிற்கென்று ஒரு மூளை உள்ளதல்லவா, அது வேறு வகையில் வேலை செய்து விட்டது” என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார் இந்த போட்டி முடிந்ததும் குரோவ்.
“எனது வாழ்நாளில் நான் நினைத்து வருந்துபவை இரு தவறுகள்தான். அந்த உலகக்கோப்பை அரையிறுதியும், 299ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததும் தான். அந்தத் தவறுகள்தான் என் மனதில் ஆழமாக பதிந்து என் நோயை மேலும் கொடுமைப்படுத்துகிறது போல” இருக்கின்றது என்று   சமீபத்தில் கூட தனது பழைய சோகங்களைப் பகிர்ந்திருந்தார் குரோவ்.



மேலும் இவர் பற்றி நான் குறிப்பிட விரும்புகின்ற மற்றுமொரு விடயம் நாம் தற்போது கொண்டாடுகின்ற நியூசிலாந்து அணியின் முன்னால் அணி தலைவர் பிரண்டன் மெக்கலம். ரோஸ் டெய்லர் போன்றோர் இவரது பட்டறையில் இருந்து பட்டை தீட்டப்படவர்கள் தான்.அதனை விடவும் மிக சிறந்த மனிதர் இவர். நியூசிலாந்து அணி உட்பட சகல நாட்டு வீரர்கள் எந்த நேரத்தில் எந்த உதவிய கேட்டாலும் செய்யக் கூடிய தாரள  மனதுக் காரர். எல்லாவற்றையும் விட தான் ஓய்வு பெற்ற உடன் கிரிக்கெட் மீதுக் கொண்ட தீராதக் காதலினால் சிறிது காலம் ஒலி,ஒளி பலப்பாலராகவும் இருந்துள்ளார்.இன்று அந்த இமயம் நம் மத்தியில்  இல்லை.




அவரது மறைவானது நியூசிலாந்து  கிரிக்கெட் அணிக்குப் மிக பெரிய பேரிழப்பாகும். 2015ம்  ஆண்டு  உலகக்கோப்பையையாவது நியூசிலாந்து அணி வெல்ல வேண்டுமென்ற அவரது கனவும் கரைந்து விட்டது. இந்த ஆண்டு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற  டி20 உலகக்கிண்ணத்தை யாவது  நியூசிலாந்து அணி வெல்வதே இருபது ஓவர் போட்டிக்கு வித்திட்ட குரோவிற்குச் செய்யும் கடைசி மரியாதையாக இருக்கும். அதன் மூலமாகவேனும் அந்த ஜாம்பவானுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். 

No comments:

Post a Comment