Tuesday, March 1, 2016

பரிதாபகரமான நிலையில் இலங்கை அணி.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்த வருடம் பல தோல்விகளை தருகின்ற வருடமாகவே இருக்கின்றது. கரணம் முதலில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற தோல்வி ஒரு பக்கம் இலங்கை கிரிக்கெட் சபையை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய அணியுடனான போட்டியில் மீண்டும் ஒருதோல்வி கிடைத்திருக்கிறது இலங்கை அணிக்கு.

இதன்படி இந்தப் போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இலங்கை அணி 09 விக்கட்டுக்கள் இழப்புக்கு 138 ஓட்டங்களை மட்டுமே எடுத்துக் கொண்டது .துடுப்பாட்டத்தில் யாருமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பிரகாசிக்க வில்லை. இலங்கை அணியில் தற்போதைக்கு ரசிகர்கள் நம்பியிருக்கின்ற சமர கபுகெதர மாத்திரம் 30 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு 139 ஓட்டங்களை சேசிங் செய்ய தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கட்டுக்களை இழந்திருந்தாலும் விராத் கோஹ்ளியும் யுவராஜ் சிங்கும் நின்று நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியினை உறுதி செய்ய , யுவராஜ் அதிரடியாக 03 ஆறு ஓட்டங்கள், 03 நான்கு ஓட்டங்களுடன் 35 ஓட்டங்களை அதிரடியாக எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.



அடுத்து வந்த பாண்டியா 01 ஓட்டத்துடன் நடையை கட்ட டோனி ஒரு ஆறு ஓட்டத்துடன் மறுமுனையில் துடுப்பெடுத்தாட விராத் கோஹ்லி 56 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற இந்திய அணி இலகுவாக வெற்றியிலக்கை அடைந்தது.

போட்டியின் சிறப்பாட்ட காரராக விராத் கோஹ்லி தெரிவு செய்யப் பட மறு புறம் இலங்கை  அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறுகின்ற வாய்ப்பு மேலும் பிரகாசமில்லாமல் இருக்கின்றது. கரணம் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே பெற்ற தொடர்ச்சியான தோல்விகள்.


இறுதி போட்டிக்கு இலங்கை அணி தெரிவு செய்யப்பட வேண்டுமாக இருந்தால் நாளை வெள்ளிக்கிழமை  இடம்பெறுகின்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிக பெரிய வெற்றியை பெற இலங்கை அணி மிக கடுமையாக போராட வேண்டி இருக்கும்.அப்படி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிக பெரிய ஓட்டங்களை பெற்று வெற்றி பெருமாக இருந்தால் இந்திய அணியுடன் இலங்கை அணி ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடலாம்.


அதற்கும் மேலதிகமாக பந்து வீச்சு சற்று சிறப்பானதாக இருந்தாலும்  கூட
 துடுப்பாட்டம் ,மற்றும்  களத்தடுப்பு  ஆகியவற்றை சீராக சரி செய்துக் கொண்டு அடுத்தப் போட்டிகளில்முழு மன திடத்துடன் இலங்கை அணி பங்கு பற்ற வேண்டி இருக்கும்.மேலும் நாளை நடைபெறுகின்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில்  இந்த தொடர்  முழுவதும் சொதப்பி வருகின்ற கசுன் ஜயசூரிய, மற்றும் அணி தலைவர் அஞ்சேலோ மத்யுஸ் ஆகியோர் தம்மை நிரூபித்துக் காட்ட வேண்டிய முக்கிய கடப்பாட்டில் இருக்கின்றதுடன் அணியின் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்பது இப்போதைக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளாக  இருக்கின்றது.

No comments:

Post a Comment