Wednesday, March 23, 2016

யதார்த்தத்தின் முழு உருவமாய் " பிச்சைக்காரன்."


திருப்பூரின் மிக பெரிய ஒரு வர்த்தகரின் ஒரே மகன் விஜய் ஆண்டனி. ஏதோ ஒரு விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும், தனது தாயைக் காப்பாற்ற என்னென்னவோ செய்தும் பலனில்லாமல் போய் விடுகிறது.


அந்த நேரத்தில் ஒரு சாமியாரின் அறிவுரைகளை கேட்டு, 48 நாள் கோடீஸ்வர வேஷம் கலைத்து, ஒரு சாதாரண பிச்சைக்காரனாக வாழத் தீர்மானிக்கிறார் படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி அந்த 48 நாட்களிலும் தன்னை யார் என்று எந்தக் காரணம் கொண்டும், யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்ற சுவாரஸ்யமான முடிச்சை கோர்த்து தந்திருக்கிறார், இயல்பாகவே தனது படைப்புக்களில் யதார்த்தத்தை மட்டுமே புகுத்த முற்படும் இயக்குனர் சசி.



இதற்கு  முன்னைய இவரது படைப்புக்களே கோரியிருக்கும்  இயக்குனர் சசி தமிழ் சினிமாவுக்குள் எவ்வளவு முக்கியமான இயக்குனர் என்பதை. அதற்கு இவரது திரைப்படங்களே ஒரே சான்று. ( 555, டிஷும், ரோஜாக்கூட்டம் போன்ற படைப்புக்கள்). அம்மாவுக்காக பிச்சைக்காரனா மாறுற மகன்தான் ஹீரோ’ 


என்று  ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டாலே பழைய படம் மாதிரி படம் எடுக்க முட்போட்டு இருக்கிறார் என்ற வார்த்தை என் நண்பர்களின் வாயில் இருந்தும் வந்தது.  இது பழைய கதை தான் ஆனால் அதில் இருக்கின்ற யதார்த்தத்தை நான் சொல்லி அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். இந்த திரைப்படம் மிக அருமையான திரைக்கதைக்கும் , அட்டகாசமான வசனங்களுக்கும் பெயர் போய் இருக்கிறது. 




என்னபா கதையின்  நாயகன் பிச்சையெடுக்கறானா?’ என்று கேட்காமல், கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடித்ததோடு, சென்டிமெண்ட் என்றெல்லாம் ஏனைய நடிகர்களை போல் அலட்டிக் கொள்ளாமல்,  நடிப்பிலும் சரி தயாரிப்பிலும் சரி  படத்துக்கு ஏற்றாத் போல தனது பங்கை மிக சரியாக செய்திருக்கின்ற விஜய் அன்டனி தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகின்ற ஒரு தவிர்க்க மடியாத நடிகன் தான் என்பதை மற்றுமொரு முறை நான் படத்துக்கு பிறகு நிருபித்து இருக்கிறார். 



விஜய் அன்டனிக்கு நாயகனாக சரியான திரைத் தோற்றம் வந்துவிட்டது. படத்தின் ஆரம்ப காட்சியில் வெளிநாடு சென்று வெளிவரும் காட்சியில் அச்சு அசல் பணக்காரத் தோரணை காட்டும் அவர், பின்னொரு காட்சியில் காதலியிடம் கையேந்தும் போது அந்த இயல்பான நடிப்பு ஆகட்டும் ,  ஃப்ளாட்பார்மில் வில்லன்  தூக்கிப் போட்ட சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடும் போதாகட்டும் பிச்சைக்காரனாகவே உணர வைக்கிறார்.
அதன்பிறகு விலை உயர்ந்த காரில் இருந்து  உடைமாற்றி வெளிவரும்போது.. கெத்து காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக, நடிகராக விஜய் ஆண்டனிக்கு இதுதான் இதுவரையிலான திரைப்படங்களில் மிக சிறந்த படம் இது.





நாயகி சாதனா டைட்டஸ். அருமையாக தனது  கதாபாத்திரத்துக்கு பொருந்தி தனது நடிப்பை சரியாக வெளிப்படுத்தியுள்ளார். முதலில் சாதாரணமாக தோன்றும் இவர், போகப் போக தன் நடிப்பிலும், அழகிலும் ரசிகர்களைக் கிறங்கடித்து விடுகிறார். அந்தக் கண்கள்...  கொள்ளை அழகு!. 



அதிலும் தனது காதலன் பிச்சைக்காரன் என்பதை அறிந்தும் அவன் மீது அவள் கொள்கின்ற காதல் அருமையான உணர்வுகளை, காதலின் அருமையை, காதலின் புரிதலை  இன்றைய காதலர்களுக்கு தந்திருக்கும் என நினைக்கிறேன். அதிலும் என்னை விட்டு நீங்காத காட்சியாக நாயகன் பிச்சை எடுக்கும் சந்தர்பத்தில் நாயகி வந்து அவனுக்கு பிச்சை கொடுக்கும் காட்சி சொல்ல வார்த்தைகளே இல்லை. உண்மையான காதல் அங்கு புரிந்தது எனக்கு. 




அம்மாவாக நடித்திருக்கும் தீபா ராமானுஜம், பெரியப்பாவாக நடித்திருக்கும் முத்துராமன் எல்லோருமே அவரவர் பாத்திரத்தைக் கச்சிதமாய் செய்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரை விடவும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கரகோசங்களையும் வாங்கி கொள்பவர்கள் அந்தப் பிச்சைக்கார நண்பர்களும், வில்லன் குழுவில் இருக்கும் ‘சந்திரபாபு’ சாயல் ஆசாமியும்தான். 


அதும் யார் சார் அந்த ‘சந்திரபாபு’ சாயல் நடிகர்? கேட்காதிர்கள் வில்லனின் ‘ரைட்’ அடிவாங்கிய பிறகு சிரிப்பை அடக்கும் காட்சியில் தியேட்டரையே சிரிப்பை அடக்க முடியாமல் செய்துவிடுகிறார்.
இந்த  இடத்தில் ஒரு விடயத்தை கூறியே ஆக வேண்டும் சசியின் வசனங்கள் என்னை ஒரு நிமிடம் கிறங்கடிக்க வைத்து விட்டன. 



அதிலும் நாயகன் பிச்சை எடுப்பவனா என்ற செய்தி அறிந்து வில்லன் கூறுகின்ற வசனம் " ஏந்தற கைக்கு, ஓங்கற பழக்கம் வராது’ " , அதுபோல தனது தாய்க்கு எல்லா பிரச்சனைகளும் நீங்கிய பிறகு இறுதியில் அந்த தாய் நாயகனை பார்த்து, உன்னால் முடிஞ்சா உதவி செய்யுப்பா முடியாட்டி பரவா இல்ல அவங்கள (பிச்சைக்காரங்களை) காக்க வைக்க கூடாதுப்பா நம்பளால அவங்க நெலமைல எல்லாம் ஒரு நாள் கூட இருக்க முடியாதுப்பா என்கிற வசனங்கள்  எல்லாம் சசியை தனிப்பட்ட இயக்குனராக மாற்றி விட்டிருக்கிறது சபாஷ் சசி.



படத்தின் மற்றுமொரு பலம் பாடல்கள் பின்னணி இசையிலும் சரி, பாடல்களுக்கான இசையிலும் சரி விஜய் அன்டனிக்கு ஒரு பூங்கொத்துக் கொடுக்கலாம். அதலும் நூறு சாமிகள் இருந்தாலும் என்ற பாடலும், உனக்காக வருவேன் என்ற பாடலும், நெஞ்சூரத்தில் என்ற பாடலும் அற்புதம். அதி அற்புதம்.
மொத்தத்தில் "பிச்சைக்காரன்  யதார்த்தத்தின் முழு உருவமாய்".




No comments:

Post a Comment