Wednesday, March 23, 2016

நிழல்களை தேடி.


 பெண்விடுதலை பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் இன்று மிக பெரிய அளவில் மேலோங்கியுள்ளது. இது பெண்களின் வரலாற்று மூலங்களை நோக்கிய ஒரு தேடல், துக்கம், சந்தோசம்; கோபம், காதல் என பல உணர்வுகளை பல எழுத்தாளர்கள் பல வகைகளில்  எழுத்துக்களாய் வடித்தாலும் கவிதை நடையில் பெண் உணர்வுகளை சொல்வது அரிது. அப்படி பெண் உணர்வுகளை கூறியிருக்கின்ற நூல் இது.


போர், பட்டினி, அரசு ஒடுக்குமுறை ஆண் அதிகாரம், பெண் ஒடுக்குமுறை ஆகியவற்றின் கீழ் அவதியுறும் பெண்களின்  மனோநிலையை, காயப்படுத்தபட்ட நம்பிக்கையின் சோகத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் இந்த நூலி ஏராளம் ஏராளம். அப்படி சில கவிதைகளையும் சில யதார்த்த உணர்வுகளையும் நூலில்  இருக்கின்ற படியாகவே இங்கு வெளியிடுகின்றோம்.முதலில் பாலியல் பலத்காரம் பற்றி நூலாசிரியர் புதிய மாதவி கூறி இருக்கின்றதாவது,
பெண்கள் மீது சுமத்தப்படும் அதிதீவிர வன்முறைதான் ஆண்களால் நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரம். 

பெண்களை ஏமாற்றும் பாவச் செயலை, துரோகங்களை என்றுமே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.பாலியல் வன்முறையானது பெண்கள் மீதான ஆண்களின் அதிகாரத்தின் அராஜகத்தின் வெளிபாடே.பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் பின் தூக்கியெறியக்கூடிய போகப் பொருள்களாக பெண் பார்க்கப்படுவதையும் எறும்புக்கடி என்ற கவிதையில் பின்வருமாறு கூறுகிறார்.


"ஒற்றை நட்சத்திரம்
போதுமா இருட்டுக்கு?
நகைக்கிறது வானம்
எப்படி புரியவைப்பேன்?
முகம் தேடி அலையும் இருட்டில்
எரியும் மெழுகுவர்த்தியிடம்
காணாமல் போகிறது
கண் கூசும் சூரியன் என்பதை "
மேலும் ஆண் மொழி அதிகாரத்தினால் சூழப்பட்டுள்ள இந்த உலகில் பெண்கள் முகம் தேடும் முயற்சியில் அவளது மொழியும் குரலும் வலிமையானதுதான் என புடம் போட்டு பேசுகிறது    புதிய நந்தன் என்ற கவிதை.


"பாலைவனச் சூடும்
பாதரச நெருப்பும்
எரிக்காத நந்தனை
எரித்துக்கொண்டிருக்கிறது
பிறந்த மண்ணில்
பிறப்பையே குற்றமாக்கி
வாயில் திணிக்கப்பட்ட
மலமும் மூத்திரமும்".
இவ்வாறாக மொத்தமாக 30க்கும் மேற்பட்ட கவிஹைகள் இந்த நூலில் நிறைந்திருக்கின்ற அந்த கவிதைகள் அனைத்துமே பெண்ணியம் என்ற ஒற்றை சொல்லின் ஊடாக யதார்த்தத்தை பேசுகின்றன. அதாவது இச்சமூகம் பெண்களை தமது ஆண் அதிகாரத்திற்குள் அடக்கி வைத்திருந்தாலும் அதையும் மீறி பல்வேறு பரிமாணங்களில் பெண் எழுத்துக்கள் மிளிரும் என்ற புதிய மொழியின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை, எரியும் சாம்பலிலும் அதன் உயிர்ப்பைக் அடையாளம் இடுவோம் என உரத்துக் கூறுகிறார்.

படிமங்களின் ஆளுமையும் ,குறியீடுகளின் அர்த்தங்களும் கவிதையாக புரிந்து கொள்ளப்படுகிற சூழலில் அன்றாடம் பெண்களின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அனுபவங்களை வார்த்தைகளால் எளிமையாக ஊடறுத்து தந்துள்ளார்.


இந்தப் புத்தகத்தின் கவிதைகளின் முழு பலமே  சக மனிதர்கள் மீதான அன்பும், சமூக பிரக்ஞையுமே எனலாம். நவீன சமூகத்தில் வெளிப்படும் இன்றைய தளங்களான பெண்ணியம், குடும்பம், கல்வி, சாதி சுற்றுச்சூழல் என எண்ணற்ற தளங்களில் ஏற்படும் பிரச்சினைகளையெல்லாம் ஊடுருவும் கவிதைகள் தான் புதியமாதவியின் கவிதைகளாகும்.சந்தர்ப்பம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

1 comment:

  1. இன்றுதான் ஏதேச்சையாக உங்கள் விமர்சனம் வாசிக்க கிடைத்தது.
    மிக்க நன்றி.
    அன்புடன்,

    புதியமாதவி,
    மும்பை.

    ReplyDelete