Thursday, March 17, 2016

கடந்த வாரம் தமிழ் சினிமா மிக முக்கியமான இரண்டு நடிகர்களை இழந்திருக்கிறது. ஒன்று தனிப்பட்ட சிரிப்பு என்று ஒன்றுக்கே பெயர் போன குமரி முத்து. இரண்டாவது மணி யார் இந்த மணி னு கேக்காதிங்க, 


நம்ம கலாபவன் மணி தான். ரொம்ப யோசிக்காதிங்க ஜெமினி படத்து வில்லன் தா, பா இந்த கலாபவன் மணி. முதலில்  குமரிமுத்துவை பற்றி எழுதுவது சரியாக இருக்கும் என நினைக்கிறன். இதுவே ரொம்ப லேட் தான் இருந்தாலும் பொறுத்துக்கங்க.   நகைச்சுவை நடிகர் என தொழில் ரீதியாக நாம் அவரை  குறிப்பிட்டாலும்,  சுயமரியாதை குணமும் திராவிடக்கொள்கையில் தீவிர பற்றும் கொண்டவர். சினிமாவில்தான் குமரிமுத்து, நாடக உலகில் அந்நாளில் அவரது பெயர் வாத்தியார் முத்து.ஆயிரம் ஆயிரமாம் கலைஞர்களை கண்ட சினிமாவில் ஆச்சர்யமாக ஒரு சிலர் மட்டும் தங்களது தனிப் பட்ட திறமைகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்கள். அவர்களில் ஒருவர் குமரிமுத்து. “ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாாா”... என அரைப்புள்ளி, கமா, முழுப்புள்ளி இன்றி ஒரு வார்த்தையை இழுத்து நீட்டி முழுக்கி சிரிப்பது என்பது அவரது பாணி.


நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்ல, தேர்ந்த குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய குமரிமுத்து,  சினிமாவுக்கு முதல்தலைமுறை நடிகர் அல்ல. பள்ளிப்பருவத்திலேயே நாடகங்கள் மீது காதல் கொண்ட குமரிமுத்து, அப்போதே சொந்தமாக நாடகங்கள் நடத்தினார். நாடகங்கள் மீதான காதலால் எட்டாம் வகுப்போடு புத்தகப்பைக்கு விடை கொடுத்து விட்டு, சென்னைக்கு ரயில் ஏறி, சகோதரரோடு சில பல நாடக முயற்சிகள்  செய்திருந்தாலும் அது கை கூடவில்லை குமரி முத்துவுக்கு. அண்ணனிடம் இருந்து சரியான   பதில்கள், சந்தர்ப்பங்கள்  கிடைக்காததால் தனது முயற்சியிலேயே வைரம் நாடக சபாவின் நாடகங்களில் வாய்ப்பை தேடி வாங்கி நடித்தார்.


இருந்தும் என்ன அண்ணனின் முயற்சியில் சிறுசிறுவேடங்கள் எப்போதாவது கிடைத்தன. கூட்டத்துடன் கூட்டமாக எட்டாவது வரிசையில் நிற்கும் வாய்ப்புதான் அவருக்கு அப்போது கிடைத்த பெரிய வாய்ப்பு.  70களின் மத்தியில் சில படங்களில் தலைகாட்டினார். சினிமா உலகில் வாய்ப்பு கேட்டு அலைந்தபோது அவரது பெயர் கே.எம்.முத்து. சினிமா உலகை பீடித்திருக்கும் ராசி,  நம்பிக்கை இவரையும் விடவில்லை. ராசிக்காக தன் பெயரை குமரி முத்து என மாற்றிக்கொண்டார்.


1968 ல்,  சென்னை  மைலாப்பூர் (FINE  ARTS ) கலையரங்கத்தில்  குமரிமுத்துவின் நாடகம் அரங்கேறியது. அந்த நாடகத்தை பார்க்க வந்த பிரபல கதை-வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனுக்கு குமரிமுத்துவின் நடிப்பு பிடித்து போக ,  எல்.பாலுவிடம் அவரை அறிமுகப்படுத்தினார். திரைப்பட வாய்ப்புகள் குறைந்து நாடகம்,  சினிமா என இரண்டுங்கெட்டனாக குமரிமுத்து இருந்த காலங்களில் வானொலி மற்றும் மேடை நாடகங்களில் நடித்துவந்தார். கிறிஸ்துவ கலை அமைப்பு ஒன்று நடத்திய நாடகங்களில் குமரிமுத்து நடித்துவந்தபோது,  புகழ்பெற்ற இயக்குநரான மகேந்திரன் அங்கு நாடக வசனங்களை எழுதிக்கொண்டிருந்தார். 


குமரிமுத்துவுக்கென தனியே கைதட்டல்கள் கிடைக்க ஆரம்பித்தது அந்தநாட்களில் இருந்து தான். கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ படம் குமரிமுத்துவின் திறமையை சொல்லும் முக்கிய படங்களில் ஒன்று. சினிமாவில் வயது வையத் வந்தவராக இருந்தாலும் கூட , தன்னைவிட இளையவர்களிடம் எந்தவிதமான ஆணவமும் இன்றி பழகுவார் நடிப்பார், நடித்தார். இவரது ஒற்றைப்பார்வையையும் அகன்ற சிரிப்பையும் கவுண்டமணி பல படங்களில் கிண்டலடிப்பதுண்டு. அப்படி பட்ட ஒரு நிதர்சனமான ஒரு நடிகர் நம் மத்தியில் இன்று இல்லை. அவர் மறைந்தாலும் அவரது சிரிப்பொலி என்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கும் சினிமா என்ற கண்ணாடியின் வழியாக !

No comments:

Post a Comment