Thursday, March 24, 2016

குறைகளை கலைத்து செம்மையான படைப்பாய்  "குற்றம் கடிதல்".



சில திரைப்படங்கள் மனதில் என்றுமே நீங்காத பாதிப்பை ஏற்படுத்தி விடும். அப்படி மிக நீண்ட நாட்களுக்கு பிறகு என்னில் என்றுமே நீங்காத தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் இயக்குனர் பிரம்மனின் "குற்றம் கடிதல்". 



தமிழுக்கு கிடைத்திருக்கின்ற மற்றுமொரு இன்றியமையாத இயக்குனர் பிரம்மன். நான் தற்போதும் ரசிக்கின்ற முருகதாஸ், சமுத்திரகனி,பாலா, ஷங்கர், சசி, என்று தமிழ் சினிமாவில் நீள்கின்ற பட்டியலில் இவரையும் இணைத்துக் கொள்கிறேன்.ஒட்டு மொத்தமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல  மொழிகளிலும் ஜிம்பாப்வே, மும்பை, கோவா, புனே, பெங்களூரு போன்ற இந்தியாவின் பல மிக முக்கிய நகரங்களிலும் படம் திரையிடப்படிருக்கின்றது. 


தமிழுக்கு இந்த வருடம் நிச்சயம் ஒரு தேசிய விருது வரும் என்கிற பெருமாப்பை தந்திருக்கிறது இந்த திரைப்படம்.
5-ம் வகுப்பு படிக்கும் ஒருமாணவன் சகமாணவிக்கு பிறந்த நாள் பரிசு கொடுப்பதற்கு பதிலாக தெரியாத்தனமாக  முத்தம் கொடுத்துவிடுகிறான். அதை தவறாய் நினைக்கும், தவறாய் புரிந்துக் கொள்ளும் ஆசிரியை கன்னத்தில் அந்த மாணவனை ஓங்கி அரைந்து விடுகிறார்.அந்த அரயினால் மாணவன் திடீரென மயக்கமடைந்து பின்னர் 'கோமாவுக்கு' சென்று விடுகிறான்.


 (அந்த மாணவனுக்கு மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்படுகிறது) இந்த விடயம் அறிந்த பள்ளி நிர்வாகம், தாக்கிய  ஆசிரியை, அவர் கணவர், ஆசிரியையைப் பிரிந்துவாழும் 'ஏசு அடியாரான' தாய்,மாணவனின் விதவைத்தாய், அவனின் முற்போக்கு மாமன், செய்தியறியும் காவல்துறை என அனைவரும் பதட்டமடைகிறார்கள்.




தொடர்ந்து இந்த நிலைமை ஊடகங்களுக்கு தெரிய வந்த தருணம்,  இந்த  விடயத்தை எப்படியாவது பெரிது படுத்தி தமிழ் நாட்டில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என ஒரு ஊடகம் ( ஒரு பெண் ஊடகவியலாளர்) போராடுகிறார். நிலைமை அறிந்த குறித்த பள்ளி ஆசிரியரின் மேலாளர் அந்த ஆசிரியரின் கணவனை ரகசியமாக அழைத்து வந்து அந்தாசிரியரையும் கூடிக் கொண்டு வெளியூருக்கு சென்று விடுமாறும் என்ன பிரச்சினை வந்தாலும் தான் சமாளித்து கொள்வதாகவும் சொல்லி விடுகிறார்.


இறுதியில் அந்த ஞாபகமே அந்த ஆசிரியரை வந்து தாக்க, எப்படியாவது அந்தமானவனின் உயிரை காக்கவும், அந்த மாணவனின் தாய், அந்த மாணவனது மாமன் என்று குறிப்பிட்ட எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியரும் மாணவனை அனுமதித்திருக்கும் வைத்தியசாலைக்கு வந்து விடுகிறார்.




அந்த தருணம் அந்த தாயிடம் அந்த ஆசிரியை மன்னிப்பு கேட்க அந்த தருணம் அந்த தாய் தனது மகனை தவிர தனக்கு எந்த உறவும் அன்பும் இல்லை அவன தான் தனக்கு எல்லாம் என்று கூறி கதறியலும் காட்சியும், எப்படியாவது தனது மகன் பிழைத்து விட வேண்டும் என அந்த ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டு கண்ணீர் சிந்தி அழும் காட்சி ஒரு பெண்ணுக்கு தாய்மை உணர்வு என்பது எவ்வளவு தூரம் புனிதமானது என்பதை அழுத்தமாக கூறி விட்டது. 

அதே நேரத்தில் அந்த காட்சியும் என்னை அதிகமாகவே பாதித்து விட்டது.
இது முற்று முழுதாக இயக்குநரின் படம் என்றே நான் கூற ஆசைபடுகிறேன். கதாநாயகனை தேர்ந்தெடுத்துவிட்டு கதையை பலவாறு ஓட்டி செல்லும் போல கதைகளுக்கு மத்தியில் , தெளிவான கதைக்கு தரமான நடிகர்களைத் தெரிவு செய்து நடிக்க வைத்திருக்கிறார்.

 

பதட்டமடைவதால் யாருடைய அன்றாட வாழ்க்கையும் ஒரேயடியாய் ஸ்தம்பித்து விடுவதில்லையென்பதை காட்சிப்படுத்தியிருப்பது தான் இந்த படத்தின் இன்றியமையாத கருத்தாக இருக்கும் என  நான் புரிந்துக் கொண்டேன். பரபரப்போடே பள்ளி முதல்வரின் துணைவியார் மாவரைக்கிறார், கணவரின் உடல்நலம் கருதி கஞ்சி வைத்திருக்கிறார், பள்ளி ஆசிரியர்கள் ஊடகங்களைக் கண்டு நடுங்குகிறார்கள். 


மிகைப்படுத்தாத காட்சியமைப்புகள் நம்மை வியக்க வைக்கின்றன.
படத்தில் சிறுவனாக மாஸ்டர் அஜித், அஜித்தின் அம்மாவாக நடித்திருக்கும் சத்யா, முற்போக்கு மாமன் பாவெல் நவகீதன், ஆசிரியையாக ராதிகா பிரஷித்தா, கணவராக சாய் ராஜ்குமார், அதிபராக  வரும் குலோத்துங்கன் உதயகுமார், அவர் மனைவியாக நடித்திருக்கும் துர்கா வேணுகோபால் என அனைவரது நடிப்பும் சொல்லால்களும் அற்புதம்.தவிரவும் தமிழுக்கு புதிய இசையமைப்பாளராக உருவாகியிருக்கும் இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜனின் இசையும் ரசிக்கக்க் கூடியது தான்.



மொத்தத்தில் குறைகளை கலைத்து செம்மையான படைப்பாய்  "குற்றம் கடிதல்".
வாழ்த்துக்கள் இயக்குனர் பிரம்மா. இன்னும் சிறந்த படைப்புக்களை தரவும் சில தேசிய விருதுகள் உங்களுக்காக உருவாக்கப்படவும்.



No comments:

Post a Comment