Saturday, December 28, 2019

2019 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய ஐவர் இவர்கள் தான்.

இன்னும் நான்கு நாட்களில் 2019 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கவுள்ளோம். இந்த நிலையில் இந்த வருடத்தில் இதுவரையான ஒருநாள் போட்டிகளில் எந்த பந்துவீச்சாளர் தனது முழுமையான திறமையை வெளிப்படுத்தி அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்ற கேள்விக்கு இந்த கட்டுரை பதிலளிக்கும்.

குறிப்பாக இங்கிலாந்தில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது . இன்னும் சில நாடுகளில் பல ஒருநாள் தொடர்கள் நடைபெற்றன. இந்த தொடர்களில் எல்லாம் ஒருசில தனிப்பட்ட பந்துவீச்சாளர்கள் தனித்து பிரகாசித்து , தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளார்கள் என்று குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும்.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளராக இந்தியாவின் மொஹமட் ஷமி பதிவாகியுள்ளார். அவர் இந்த வருட போட்டிகளில் மாத்திரம் 42 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்த சிறப்பை பெற்றுள்ளார். இந்த மைல்கல்லை மொஹமட் ஷமி வெறும் 21 போட்டிகளில் எட்டியுள்ளமையானது அவரது அதிசிறந்த பந்துவீச்சுக்கு ஆதாரமாய் அமைந்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் 69 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்கள் என்பது மொஹமட் ஷமியின் அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியாக அமைந்துள்ளது.

குறிப்பாக உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மொஹமட் ஷமி ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தமையும் சிறப்பம்சமாகும்.

மொஹமட் ஷமிக்கு முன்னர்  இந்தியா சார்பாக இந்த சாதனையை யார் படைத்தது?

இந்தியா சார்பாக மொஹமட் ஷமிக்கு முன்னர் வெறும் மூன்று வீரர்கள் மாத்திரமே தாங்கள் விளையாடிய காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்களாக பதிவாகியுள்ளனர்.

அந்தவகையில் 1986 ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக பதிவாகியிருக்கிறார்.
அதன்பின்னர்  1998 ஆம் ஆண்டு அஜித் அகார்கார் இந்த சிறப்பை பெற்றுள்ளார்.
அஜித் அகார்காருக்கு பின்னர் நான்கு வருடங்களில் இந்தியா சார்பாக இந்த சாதனையை எந்தவொரு பந்துவீச்சாளரும் படைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க காரணியாக அமைந்துள்ளது. குறிப்பாக 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி  அவுஸ்திரேலிய வீரர்கள் சர்வதேச மற்றும் டெஸ்ட் ​போட்டிகளில் கோலொச்சிய காலம் என்பது  கிரிக்கெட் ரசிகர்கள் யாவரும் அறிந்த விடயமாக பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் அவுஸ்திரேலிய வீரர்களையும் விஞ்சியவாறு இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான இர்பான் பதான் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக பதிவாகியிருந்தார். குறிப்பாக இந்திய அணியில் அப்போதைய காலகட்டத்தில் சஹிர் கான் ,ஸ்ரிசாந்த் உள்ளிட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். அவர்களையும் விஞ்சி ஒரு பகுதி நேர வேகப்பந்து வீச்சாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இர்பான் பதான்  இந்த மைல்கல் சாதனையை எட்டியிருந்தார்.

இது இவ்வாறிருக்க ,2004 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையான 14 வருடங்களில் எந்தவொரு இந்திய பந்துவீச்சாளராலும் ஒருநாள் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சிறப்பை பெற முடியாமல் போயிந்தது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

எனினும் இந்த வருடத்தில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக மொஹமட் ஷமி பதிவாகியிருக்கின்றமை இந்திய கிரிக்கெட்டின்  எழுச்சிமிகுந்த வளர்ச்சியின் ஒரு அங்கம் என குறி்ப்பிடலாம்.

ஷமியின் போட்டியாளர்கள் யார்?

என்னதான் இந்த வருடத்தின் இதுவரையான ஒருநாள் போட்டிகளில் மொஹமட் ஷமி அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக பதிவாகியிருந்தாலும் , அவருக்கு அதிக போட்டியாளர்கள் இருந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்க காரணியாக அமைந்துள்ளது.

குறிப்பாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ட்ரன்ட் போல்ட் , 2009 ஆம் ஆண்டில் 38 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்த பட்டியலில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். மொஹமட் ஷமியை போலல்லாமல் தனக்கேயுறிய பாணில் அபாரமாகவும் அற்புதமாகவும் பந்துவீசும் ட்ரன்ட் போல்ட் வெறும் 20 போட்டிகளில் இத்தனை விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை சிறப்பம்சமாகும்.

21 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்கள் என்பது இந்த வருட ஒருநாள் ​போட்டிகளில் ட்ரன்ட் போல்டின் அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியாக அமைந்துள்ளது.

ட்ரன்ட் போல்டுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் மற்றொரு மித வேகப்பந்து வீச்சாளரான லொக்கி பேர்கியூசன் இந்த வருடத்தில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக பதிவாகியிருக்கிறார்.

லொக்கி பேர்கியூசன் இந்த வருடத்தில் 17 போட்டிகளில் விளையாடி  அதில் , 35 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முஸ்டபிஷூர் ரஹ்மான் இடம்பிடித்துள்ளார். அவர் 16 போட்டிகளில் 34 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அதற்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார்  இருக்கிறார். புவனேஷ்வர் குமார் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் , 33 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
புவனேஷ்வர் குமார் வெறும் 19 போட்டிகளில் இந்த இலக்கை அடைந்துள்ளதோடு , 31 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்கள் என்பது அதிசிறந்த பந்துவீச்சாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment