Wednesday, September 28, 2016

நூல் அறிமுகம்.இபின் பதூதா.
வாழும்  காலத்தில் பயணம் செய்பவர்களை நாம் அறிவோம். ஆனால் பயணம் செய்வதற்காகவே வாழ்ந்தவர் இபின்  பதூதா. இன்று நாம் மேற்கொள்ளும் பயணங்களைப் போன்றதல்ல இப்ன் பதூதாவின் பயணங்கள். கால் கடுக்க நடக்க வேண்டும். பாலைவனங்களைக் கடக்கவேண்டும். கடலில் மிதக்க வேண்டும். எங்கும் ஆபத்து, எதிலும் ஆபத்து.ஓர் ஆராய்ச்சியாளருக்கு இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் இப்ன் பதூதாவிடம் இருந்தது. 
30 ஆண்டுக் காலம் பயணியாய், இரு கண்டங்கள், 44 நாடுகளில்   பனி உறைந்த மலைகள், சுட்டெரிக்கும் சகாரா மணல், நைல் நதியின் வெள்ளம், கொந்தளிக்கும் கடல் என்று கடந்து வந்தவர். யுவான் சுவாங் போல மூன்று மடங்கு பயணித்தவர்.
“மாபெரும் பறவையின் சிறகின் மீது இருப்பதாகக் கனவு கண்டேன்; அது என்னுடன் மெக்காவின் திசைவழியில் பறந்து பின்னர் ஏமனை நோக்கிச் சென்றது... இறுதியில் கிழக்கினை நோக்கி நீண்டு பயணித்து, பசுமையும் இருளும் கொண்ட நாடொன்றில் இறங்கி என்னை அங்கே விட்டுச்சென்றது” என்று பதூதா தன் குறிப்புகளில் எழுதுகிறார். நைல் நதியின் டெல்டா பகுதிக் கிராமம் ஒன்றில் இருந்தபோது அவரது பதிவு இது.
அவரது பயணம் பிரம்மாண்டமான பறவையுடன் சென்ற பயணமாகவும், பிரம்மாண்டமான பறவையின் பயணமாகவும் இருக்கிறது. “ஒரு பறவை தன் கூட்டிலிருந்து சிறகடித்துச் செல்வதுபோல், புனிதத் தலங்களைத் தரிசிக்கும் வேட்கையுடனும் உறுதியுடனும், உற்றார் உறவினிடமிருந்து பிரிந்து புறப்பட்டேன்.” இப்புறப்பாடு அவரது 21 வது வயதில்.என்று அவரது மொழியில் அவர் பற்றி அவரது பயணங்கள்  பற்றி எழுதிய ஆதாரங்கள் தான் இந்த நூலில் முலிடம் பிடித்திருக்கின்றன.


மேலும் இபின் பதூதா தனது பயணத்தை ஆரம்பித்தமைபற்றி இந்தநூல் இவ்வாறு சான்றுகளை பகர்கின்றது. அதாவது ஷேக்அபு அப்துல்லா முகம்மது இபின் அப்துல்லா இபின் முகம்மது இபின் இப்ரஹிம் அல்-லாவதி என்னும் முழுப் பெயருடைய இபின் பதூதா மொராக்கோவின் டாஞ்சியர்ஸ் நகரிலிருந்து மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளத் தொடங்குகிறார். வழக்கறிஞர் குடும்ப மரபில் வந்தவராதலால், மெக்காவில் சட்டத் துறை அறிவை மேம்படுத்திக்கொள்ளும் ஆசையைக் கொண்டிருந்தார்.


டுனிஷ், அலெக்ஸாண்டியா, கெய்ரோ, பெத்லகேம், ஜெருசலேம், டமாஸ்கஸ், பாரசீகம், பாக்தாத், ஏமன், ஓமன், ரஷ்யா, ஆப்கானிஸ்தானம், இந்தியா என்று அவரது வழித்தடம் விரிந்துகொண்டே போகிறது. இதற்கிடையே மூன்று முறை ஹஜ் பயணம் மேற்கொள்கிறார். இரண்டாண்டுகள் மெக்காவில் தங்கிச் சட்டம் படிக்கிறார்.


30 ஆண்டுகள் பயணிக்க ஒருவருக்கு எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும்! ஆனால் பதூதாவைப் பொறுத்தவரை அப்படி இல்லை. சாதாரண குடும்பத்தவரான பதூதாவுக்கு, ஓர் அறிஞர் என்ற வகையில் அவர் செல்லும் நாடுகளின் மன்னரெல்லாம் உதவுகின்றனர். ஒரு மன்னர் குதிரையும் இரு தங்க நாணயங்களும் அளித்தால் இன்னொருவர் பட்டாடை அணிவித்துப் பல்லக்கில் அழைத்துச் செல்கிறார். 

அரண்மனையில் தங்கி எவ்வளவு நாட்களையும் கழித்துவிடலாம்.இந்தியாவில் முகமது பின் துக்ளக் ஆட்சிக் காலத்தில் வந்த அவர், ஏழாண்டுகள் நீதிபதியாக இருந்திருக்கிறார். மாலத்தீவுகளில் 18 மாதங்கள் நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார். துக்ளக்கின் தூதுவராகப் பெரும் பரிவாரம், பரிசுப் பொருட்களுடன் சீனம் சென்று வந்திருக்கிறார்.


மேலும்  பனி மூடியிருக்க, 40 நாட்கள் கடின பயணத்தினால் இந்தியா வந்த போது மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர்  துக்ளக்கின்  கோபத்துக்கு ஆளான வரலாறுகள் பற்றிய தக்வல்களும் இந்த நூலில் மேலதிக தகல்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் மிகப் பெரிய பயணி இவர் என்று யாரேனும் கூறினால் அது பொய்யில்லை” என்று அந்தக் குறிப்புகள் முடிகின்றன.
 மார்க்கோபோலோவின் பயணக் குறிப்புகளில்கூடச் சந்தேகங்களும் குழப்பங்களும் உண்டு. ஆனால் பதூதாவின் குறிப்புகள் துல்லியமானவை என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“வாழ்வென்பது தூய சுடர், நமக்குள்ளேயிருக்கும் புலப்படாத சூரியனால் நாம் வாழ்கிறோம்” என்பார் தாமஸ் பிரவுன். அத்தகைய சூரியன் பதூதாவுக்குள் கனன்றுகொண்டிருந்திருக்க வேண்டும்.
தேடல், புதிய பிரதேங்களை, புதிய மனிதர்களைச் சந்திக்கும் ஆர்வம். கூடுதலாக, உள்ளம் முழுக்க உறுதி.வரலாற்று துறைக்கு சார்ந்தவர்களுக்கு எஸ். சந்திரா மௌலியின் இந்த நூல் வரமே. 

No comments:

Post a Comment